Tuesday, 25 August 2009

காணவில்லை!

யாரை என்று கேட்காதீர்கள்... என்னைத்தான் காணவில்லை சிலநாட்களாய்!
'இரசாயனவியல்' என்மீது இரக்கம் காட்டமாட்டேன்கிறது.
ஆதலால் தயவுசெய்து .... செப்டம்பர் 7வரை யாரும் என்னை தேடாதீர்கள்....

நீங்கள் வந்து ஏமாந்து போவதை என்னால் தாங்கமுடியாது.. அதனால் முன்கூட்டியே அறியத்தந்துவிட்டேன்...பிறகு என்னை திட்டக்கூடாது.... அனைவரையும் மீண்டும் எனது புதிய அகவையில் சந்திக்கிறேன்.

Wednesday, 12 August 2009

சந்திப்போமா சந்திப்போமா!

நானும் இந்த பதிவை கடந்த வாரத்திலிருந்து பதிவோம் பதிவோம்னு இருந்து.. முடியாமலே போய்ட்டுது.... சரி... நான் விஷயத்தை மட்டும் சொல்லிட்டு, எனக்கு வந்த அழைப்பிதல் அம்சங்களை அப்படியே கீழே தருகிறேன்.

ஏனைய சில நாடுகளில் இடம்பெறும் வலைப்பதிவாளர்கள் ஒன்றுகூடல் இங்கும் இடம் பெற உள்ளமை நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். என்றாலும் இந்த செய்தியை எனது வலைப்பூவிலும் பதிந்து அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வந்தியத்தேவன் மற்றும் லோஷன் அண்ணா(தொலைபேசிமூலமாகவும்) இருவரும் அன்போடு அழைத்ததால் மறுக்க முடியவில்லை.
(தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு விசாரித்த ஏனைய நண்பர்களுக்கும் நன்றி!)

சில நாட்களாக பலதரப்பட்ட வேலைகளில் முழ்கி முக்குளிப்பதால்.. நேரம் ஒதுக்குவது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. இவற்றுக்கிடையில் சக்தி சூப்பர் ஸ்டார் தயாரிப்புப்பணி வேறு... என்றாலும் நாளை வணக்கம் தாயகம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு... காலை பதினோரு மணியளவில் ஒன்றுகூடலில் கலந்து கொள்ள... சும்மா கில்லினி கில்லினி (கில்லிக்கு பெண்பால் ஹி ஹி... ) மாதிரி வந்து சேருகிறேன்..நீங்களும் வாருங்கள்.

இலங்கைப் பதிவர் சந்திப்பு
காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும்
ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை
வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி
செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப
சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள்,
பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு
கொள்ளவும்.


லோஷன் :
arvloshan@gmail.com
புல்லட் :
bullettheblogger@gmail.com
வந்தி :
vanthidevan@gmail.com
ஆதிரை :
caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின்
மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து
மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித
தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோ
சனைகள் இருந்தால் தயவு செய்து
தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்;
உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது
ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன்
இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு
அன்புடன் வேண்டுகிறோம்..


Tuesday, 11 August 2009

ATM இன் 'அறிந்தும் அறியாமலும்' பதிவு-பாகம் இரண்டு



வாழ்க்கையில் சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். ஆனா என்ன செய்ய சில பொய்யான விடயங்களும் உண்மை என்ற ரூபத்தில் எமது நாளாந்த வாழ்வில் சேர்ந்தே வருவதால் அவற்றை ஆராய்ந்து பார்க்க நேர அவகாசம் கிடைக்காதபோது அந்த உண்மைத்திரை உடுத்தி வந்த பொய்யையும் நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

உதாரணம் வெகு தொலைவில் இல்லை...

நேற்று நான் பொதுநல நோக்கில் அவசர அவசரமாக பதிந்த பதிவு (அறிந்தகணமே பகிர நினைத்து பதிந்த பதிவு) அதுவும் மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில்...

ஹையோ ஹையோ ...என்னத்த சொல்லி என்னத்த செய்ய....

நேற்று அந்தப்பதிவினை தட்டச்சு செய்துகொண்டு இருந்த போதே என்னுள் சில கேள்விகள் எழுந்தன. அதாவது குறித்த 'ரிவேர்ஸ்' இலக்கம் பதியும் தொழிநுட்ப அலாரம் எப்படி ஒரே இலக்கங்களை pin இலக்கங்களாக கொண்டவருக்கு பயன் தர முடியும் ? அதாவது ஒருவர் 1111 என்ற இலக்கங்களை 'pin'ஆக கொண்டிருப்பின் அவருக்கு இந்த நுட்பமுறைமூலம் எந்தப்பலனும் இல்லையே!

அதே போல் 2552 இப்படியான அமைப்புள்ள pin இலக்கச்சொந்தக்காரருக்கும் பயனில்லை இல்லையா ?(நிச்சயம் உங்களுக்கும் இந்த சந்தேகம் எழுந்திருக்கலாம்)

'தெருவிளக்கு' வலைப்பதிவர் 'அஹமட் சனூன்' கூட அந்தப்பதிவின் பின்னூட்டத்தில்
//எப்படி இருப்பினும் எனக்கு ஒரு சந்தேகம்
எனது இரகசிய குறியீட்டிலக்கம் இரண்டு பக்கமிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியல்லவோ இருக்கிறது.என்னால் என்ன செய்ய முடியும்//

என குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் இந்த குறித்த அறிவுறுத்தல் பற்றி திருடனேகூட அறிந்திருக்க வாய்ப்புள்ளதே...

இந்த நடைமுறை இலங்கையில் உள்ளதா?

இந்த சந்தேகங்களோடு.... பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இதில் உண்மை எது பொய் எது என்று தேடிய சந்தர்ப்பத்தில் நண்பன் பகீரதன்(ஆகாயகங்கை பதிவர்) எனது தேடலை இலகுபடுத்திச்சென்றார். அதிகாலை 5 மணியளவில் இந்த தகவல் பற்றிய பூரண விளக்கத்தை தரக்கூடிய ஒரு இணைப்பினை முகப்புத்தகம் வாயிலாக அறியத்தந்தார்.

அவர் தன்னுடைய நேரத்தை பெரும்பாலும் இணையத்தளத்தில் செலவிடுவதால், குறித்த பதிவிற்கான சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் மிகப்பயனுள்ள ஒரு இணைப்பினை எனக்கு அனுப்பியிருந்தார்.

அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கமும் ஆவலும் உந்தவே இன்று காலை உங்களிடம் கால அவகாசம் கேட்டிருந்தேன்...
வேலைக்குச்செல்லும் அவசரத்தில்..

இதுவரை நேரம் பொறுமை காத்த நண்பர்கள்... இப்பதிவிற்காக அடிக்கடி இன்று எனது 'வலைப்பூ' பக்கம் எட்டிப்பார்த்த அன்பர்கள் .. அனைவருக்கும் என் நன்றிகள்! (இன்று மட்டும் கிட்டத்தட்ட எனது வலைப்பூவிற்காக 120 வருகைகள்)

www.hoax-slayer.com வலைத்தளத்தில்

இந்த இணைப்புக்குரிய வலைத்தளம்.. எனது பதிவிற்கான சந்தேகத்துக்கு மட்டுமின்றி.. தினமும் எமது மின்னஞ்சல் பெட்டிக்குள் வந்து சேரும் பலதரப்பட்ட மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிச்சயம் உதவும். பார்த்து, வாசித்துப்பயன்பெறுங்கள். இந்தப்பயனுள்ள பதிவினை நான் உங்களுக்குத்தர மறைமுகக்காரணமாய் இருந்த நண்பன் பகீரதனுக்கும் உங்கள் நன்றிகளை தெரிவிக்க மறவாதீர்கள்.

(இந்த வியாழக்கிழமை அருகாமையிலுள்ள ATM கூடத்தில் இதை முயற்சி செய்து பார்க்க இருந்தேன். நல்லவேளை... தப்பிச்சேன் எமது நாட்டில் ஒரு விஷயத்தை செய்தால் அது வேறொரு வினையை அழைத்து வந்திருக்கும்)
கொடுத்த பதிவுத்தலைப்பினை நானே ஒருமுறை வாசித்துப்பார்க்கிறேன்.
ATM இன் 'அறிந்தும் அறியாமலும்'

ஹும்.... 100 வீதம் பொருத்தமாகத்தான் இருக்கு....

ATMஇன் 'அறிந்தும் அறியாமலும்'

தலைப்பைப்படித்துட்டு இதென்ன ஏதாவது திரைப்படத்துக்கு புதுப்பெயரா இல்லாட்டி அறிந்தும் அறியாமலும் பாகம் இரண்டா ?? இப்படியெல்லாம் ஆர்வக்கோளாருல அவசரப்பட்டு முடிவெடுப்பது மூளைக்கு நல்லதல்ல சொல்லிட்டேன்....

இனி தொடருங்க....

அநியாயங்களும் அவலங்களும் .... அநியாயத்துக்கு நிறைந்து கிடக்கும் இவ்வுலகில்.. அசம்பாவிதங்கள் நேரும்போது அவற்றை பல சந்தர்ப்பங்களில் நாமே துணிந்து,நேருக்குநேர் நின்று போராடியோ, சாமர்த்தியமாக செயற்பட்டோ அவற்றிலிருந்து எம்மை காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

பணம் மீதுள்ள மோகம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் இவற்றை எங்களால் தகர்த்தெறிய முடியாவிட்டாலும், சில சந்தர்ப்பங்களில் அவற்றை சமாளித்து எங்களையும் எங்களது உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்வதற்கான வழியை அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது.

கீழே நீங்கள் காணும் படங்கள்...
ஒரு பிரபல வெளிநாட்டு வங்கி ATM கூட்டுக்குள் நடைபெற்ற உண்மைச்சம்பவம்.






இப்படியான ஒரு நிலை உங்களுக்குகூட நேருவதற்கான வாய்ப்பு இல்லாமலில்லை. (உலகம் போகிற போக்கைப்பார்த்தால் அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது).

அப்படி நேருமாயின் அந்நேரத்தில், திருடனோடு வாதாடுவதோ அல்லது உங்கள் எதிர்ப்பைக்காட்டுவதோ உசிதமானதல்ல.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுடைய ATM அட்டைக்குரிய pin இலக்கத்தை ரிவர்ஸ் முறையில் அழுத்துவது மட்டுமே.
உதாரணத்துக்கு உங்கள் pin இலக்கம் 1234 ஆக இருப்பின் அதை நீங்கள் 4321 என அழுத்த வேண்டும்.

இப்படிச்செய்யும்போது பணம் பாதி வெளியில் வந்தும் மீதி வராமலும் இருக்கும். அதேகணம் வங்கிக்குரிய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் குறித்த சம்பவம், ஒரு அலாரம் மூலம் அறிவிக்கப்படும்.(pin இலக்கத்தை ரிவேர்ஸ் முறையில் அழுத்தும்போது இந்த தானியங்கிமுறை அலாரம் செயற்படும்விதமாக ஒவ்வொரு வங்கியாலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது)
எப்படி............??

இப்ப இதை வாசிச்சு மனசுக்குள் மட்டும் வைத்திருக்காமல் முடியுமானவரை இந்த தகவலை உங்கள் அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

"அறிந்துகொண்டதை பகிர்ந்துகொள்வதன்றி வேறெதிலும் முழுமையான சந்தோஷமும் மனத்திருப்தியுமில்லை" இந்தக்கூற்றோடு உடன்படுவோர் நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு....

Sunday, 9 August 2009

'உணர்வாய்' மழை(யை)!

"மழையே ஓ மழையே புன்னகை தூவுறியே", "வான் மேகம் பூப்பூவாய் தூவும்", "வானமழை போலே புதுபாடல்கள்... கான மழை தூவும் முகிலாடல்கள்" இந்தப்பாட்டுக்கள் எல்லாம் மனதோரம் எட்டிப்பார்த்துச்செல்லும் மழையை நான் ரசிக்கும் நாட்களிலெல்லாம்...

அந்த "மழையின் அழகை கண்டு ரசிக்க இரண்டு கண்கள் போதாது". இது மழை ரசிப்போர் சங்க உறுப்பினர்களின் ஆதங்க வாசகம்.

இயற்கை அன்னை தந்த வரங்களில் இந்த மழையானது மழலைகள் மலைத்து ரசிக்கும் சொர்க்கம். மழலைப்பருவம் கடந்தும்கூட இன்னும் சிலர் அதை மறக்காமல் ரசிக்கிறார்கள் (அந்தப்பட்டியலில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..)

" 'சோ'வென அழுகிறது -மேகத்தின் கருக்கட்டலில் மழைக்குழந்தை " ஏதோ பள்ளிப்பருவ நாட்களில் கிறுக்கிய கவிதை... இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. சில்லென்ற நினைவுகளும் கூடவே.... அந்த நாட்களில், சிறுவயதுசோகங்களை பகிர்ந்து அழும்போது இந்த மழையும் என்னோடு சேர்ந்தே அழுதிருக்கிறது.

கண்கள் எந்தளவுக்கு மழையின் அழகினை ரசிக்கின்றனவோ அந்தளவுக்கு செவிகளும் கூட அதன் ஓசை கேட்டு உள்ளந்தனை லயிக்கச்செய்கிறது.

மழை தரும் ஓசையில் செவிகள் பெறும் அந்த இன்பம் சிலவேளைகளில் காதுவரை கம்பளியை இழுத்துப்போர்த்தியபடி என்னை உறங்கவும் வைத்திருக்கிறது.

நுவரெலியா பிரதேசம் மழையின் உல்லாசபுரி என்பதால்.. அங்கிருந்த நானும் அதன் வருகையை அடிக்கடி அனுபவித்திருக்கிறேன். ஆட்கொள்ளப்பட்டிருக்கிறேன். (ஆனா இப்ப நுவரெலியாவில் காலநிலை மாறிப்போச்சு... அம்மா அடிக்கடி சொல்லும் 'பஞ்ச் இல்லா' வசனம்)
ஹையோடா.... இந்த மழை பற்றி சொன்னா.. சொல்லிக்கொண்டே போகலாம்.... சரி சரி இப்ப இந்த பதிவிற்கான 'கிளைமாக்ஸ்'க்கு வருவோம்.

கீழே உள்ள வீடியோவை நீங்கள் பார்ப்பதற்கு முன்னர்.. அதன் (PLAY)ப்ளே பொத்தானை அழுத்திவிட்டு.. உடனடியாக கண்களை மூடி, சத்தத்தை மட்டும் செவிமடுங்கள். அதன்பின் அந்த சத்தம் எவ்வாறு எழுப்பப்பட்டது என்பதை மீண்டும் அந்த வீடியோவை (PLAY)ப்ளே செய்து பாருங்கள்.




சில உணர்வுகள் வார்த்தைகளால் வர்ணிக்கவியலாதவை. அந்த உணர்வை இந்தப்பதிவு தந்தது என நீங்கள் உணர்ந்திருந்தால் மறக்காமல் உணர்ந்ததை வெளிப்படுத்திச்செல்லுங்கள்.

Saturday, 8 August 2009

மயூரனுக்கு 'சுவாரஸ்ய' நன்றி!



எதிர்பார்க்காத விடயங்கள் எதிர்பார்க்காத நேரங்களில் நிகழும்போது அவை தரும் சந்தோஷங்கள் வார்த்தைகளால் வர்ணிக்கவியலாதவை. அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு இன்று கிடைத்தது சுவாரஸ்யப்பதிவர்களில் ஒருவரான மயூரனிடமிருந்து!


சக அறிவிப்பாளர் மட்டுமன்றி.. நல்ல எழுத்தாற்றலும், ஆர்வமும் உடையவர் மயூரன். புதிய, நடப்பு விடயங்களை தேடி, முந்திக்கொண்டு பிறருக்கு தரவேண்டும் என்ற ஒரு 'வெறி' இவரிடம் உண்டு. அதை "இப்படியொரு வழியிலும்(பதிவிடல்) செய்யுங்கள் அண்ணா" என்ற இந்த சகோதரியின் சிறிய கோரிக்கையை ஏற்று, அதை வழி நடத்தி.... குறைந்த காலப்பகுதியில் சதப்பதிவையும் எட்டி இப்போது இந்த 'சுவாரஸ்யப்பதிவர்' என்ற விருதையும் வென்று... ''யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'' என்ற நோக்கில் அதை பகிர்ந்தளித்துள்ளார் . அந்தப்பகிரலில் என்னையும் இணைத்தமைக்கு அவருக்கு சாதாரண நன்றியெல்லாம் போதாது.... கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே...
எனவே மயூரன்.. உங்களுக்கு என் 'சுவாரஸ்ய' நன்றி!


இலத்திரனியல் ஊடகங்களாக வானொலி, தொலைக்காட்சி இவற்றோடு 'நியூ மீடியா' என்றழைக்கப்படும் இணைய இதழ்கள் கோலோச்சும் இந்நவீன யுகத்தின் இன்னொரு புரட்சியாக 'வலைப்பதிவுகள்' வளர்ந்துகொண்டு வரும் வேகத்தில்,தம்மையும் சேர்த்தே செலுத்திக்கொண்டிருக்கும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சுழன்றுகொண்டிருக்கும் 'வலைப்பதிவு விருதுகள்' நிச்சயமாக வரவேற்கத்தக்கவைதான்.

காரணம் எழுத்தார்வமும் ஆளுமையும் கொண்ட ஆர்வலர்கள் இந்த அவசர யுகத்தில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி தொடர்ந்தும் அதை தக்கவைத்து, பிறரையும் ஊக்குவித்து சமூகத்துக்கு ஏதோ ஒரு வழியில் ஒன்றை செய்யத்தூண்டுகிறது.

சாதாரணமாக எழுதத்தொடங்கும் ஒருவன் ஒரு கட்டத்தில் பண்பட்ட பதிவுகளை தொடர்ந்து தரக்கூடிய ஆற்றலை இவ்வலைப்பதிவு விருதுகள் தரும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

ஆனால் ஒருவிடயத்தை வலைப்பதிவிடும் நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது உங்கள் தேடல்கள் மற்றவர்களை சென்றடைந்து அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் பயனைத்தரும்படியான பதிவுகளை தரவேண்டுமே தவிர...இவ்வகை விருதுகளை பெரும்நோக்கிற்காக மட்டும் உங்கள் பதிவுகளைத்தரக்கூடாது. அதாவது...

"பதிவுகளுக்காகவே விருதேவோழிய... விருதுக்காக பதிவன்று"
என்பதை எப்போதும் உங்கள் சிந்தையில் இருத்திக்கொள்ளுங்கள்.
(இது உங்கள் சகோதரியின் / தோழியின் சிறிய வேண்டுகோள்)

சுவாரஸ்யப்பதிவர் விருதினை பெற்றுக்கொண்ட ரமணன் அண்ணாவுக்கும் http://ramanansblog.blogspot.com/ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மீண்டும் சந்திப்போம் ...சிந்திப்போம் ஒரு சுவாரசியமான பதிவுடன் ( என்ன செய்ய... சுவாரசியப்பதிவர் விருதெல்லாம் கொடுத்துட்டாங்க... இப்ப தான் டென்சனும் கூட... இனி கொடுக்கும் பதிவெல்லாம் வாசிப்போருக்கு சுவாரசியமா இருக்கவேணுமே..)

Wednesday, 5 August 2009

அந்த 'ஐந்து' நாட்கள்!


வேலை முடித்து இன்று கொஞ்சம் வேளைக்கே வீட்டுக்கு வந்ததால்.. குஷி மூடில்.. ஒரு குஷியான பதிவு தரத்தீர்மானித்ததன் விளைவு...வந்த மின்னஞ்சலில் இருந்து சுட்ட படங்களை இன்றைய பதிவின் பாத்திரமாக்குகிறேன்.

ஷபா..... இந்த அலுவலகத்துக்கு போய் வேலை செய்வதில் இருக்கும் கொடுமை இருக்கே.... நீங்களும் அனுபவிச்சிருப்பீங்க அதை..அதனால் நான் (அதை) விளக்கத்தேவையில்லை. ஆனா அந்த வார நாட்கள் ஐந்திலும் நாங்க கொடுக்கிற முக பாவம் இருக்கே ... அதை இந்த படங்களை விட வேற எதுவும் இவ்வளவு அப்பட்டமா வெளிப்படுத்த முடியாது. உங்க வயசுக்கேற்ற மாதிரியே முக பாவமும் கீழே!


நம்ம பாஸ் முதல் ரகம்.. நான் இரண்டாவது ரகம்...(பின்ன 30 வயசுக்கு உட்பட்டவங்களுக்கு இரண்டாவது தானே..)
ரொம்ப.............. பிசியா இருந்தா .. நான் கூட இப்படிதான் இருப்பேன்.........
அதனால் என்னை அணுகுவோர்... கொஞ்சம் பார்த்து கவனமா அணுகுங்க... ஹி ஹி



குறித்த நாளுக்கு சரியான முகத்தை பார்த்து மாட்டிக்கொண்டு போகவேணும். இல்லாட்டி கதை கந்தல்.


நல்ல வேளை இப்படி ஒரு பாஸ் .. எனக்கு கிடைக்கல........தப்பினேன்டா சாமி...


பார்த்து சிரிச்சது போதும் ... போய் வேலையப்பாருங்க.... இன்னும் இரண்டுநாள் வேலை செய்யணும்... வார இறுதியில் சந்தோஷமாய் இருக்க...

இப்ப என் உடனடி பிரார்த்தனை என்னவென்றால் ... இத என் 'பாஸ்'(BOSS) மட்டும் பார்க்கக்கூடாது.....

அடுத்த பதிவு என்னவா இருக்கும்??? .... நீங்க யோசிக்கிற Gapல நான் எஸ்கேப் ...

Tuesday, 4 August 2009

பஞ்சாக்கும் FRING மூலம் 'ட்ரிங் ட்ரிங்'


கையடக்கத்தொலைபேசியானது .. இக்காலத்தில் 'தொல்லை'பேசியாகவும் மாறி வரும் சந்தர்ப்பத்திலும்கூட... இதன் பாவனையுடன் இணைய-வலைப்பின்னல் இணையும்போது சில குறிப்பிட்ட செலவுகளையும் கட்டுப்படுத்தக்கூடியதாய் இருக்கின்றது.

குறிப்பாக கடல் கடந்து வாழும் எமது உறவுகள் நண்பர்களுடன் உரையாட, அவர்களுடன் தினமும் தொடர்பு கொள்ள சிக்கனமான வழிமுறைகளை தேடுகிறோம். தேடிக்கண்டதை பயன்படுத்துகிறோம். இப்படியான வழிமுறைகள் மூலம் முடியுமானவரை எமது அழைப்புகளுக்கான கட்டணங்களை குறைக்கக்கூடியதாய் இருப்பதோடு, நீண்ட நேரம் உரையாடக்கூடியதாயும் உள்ளது. இவற்றுள் இப்போது அதிக பாவனையில் இருப்பவை முகப்புத்தகம், இஸ்கைப், மேசென்ஜெர்,ICQ etc... என்பனவாகும்.

இவற்றோடு தற்போது மெல்ல மெல்ல தன் ஆதிக்கத்தை பரப்பிவரும் தொழிநுட்ப முறையானது Internet Telephony Network இனை அடிப்படையாகக்கொண்ட FRING என்ற (peer-to-peer) வலைக்கட்டமைப்பு முறை மூலம் செயற்படும் Mobile VoIP ஆகும்.

Avi Shechter இதனை கண்டுபிடித்தவராக இருந்த போதும் இவரோடு இன்னும் இருவரும் இந்த கண்டுபிடிப்புக்காக போற்றப்பட வேண்டியவர்கள். அவர்கள் Boaz Zilberman மற்றும் Alex Nerst.
இந்த Fring மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் VoIP(Voice of Internet Protocol) மற்றும் PSTN(Public switched telephone network) இனூடாக செலுத்தப்பட்டு GSM தொழிநுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலமாக செயற்படுத்தப்படுகிறது.

கைப்பேசியில் இந்த Fringஇனை தரவிறக்கம் செய்துகொள்வதன் மூலமாக Skypeஇலிருந்து Skypeஇற்கு இலவசமாக அழைப்பினை மேற்கொள்ள முடியும். இதேபோல ஒலித்தொடர்பாடல் சம்பந்தப்பட்ட ஏனைய சமூகவலைப்பின்னல் தொடர்புடைய இணையத்தளங்களையும் FRING மூலம் பெற்றுப்பயன்பெறமுடியும்.
FRINGஇனை உங்கள் கைப்பேசியில் தரவிறக்கம் செய்ய http://www.fring.com/default.asp இணைப்பினை Click செய்க.

அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றி பயன்பெறுக.

பயன்படுத்திட்டு சொல்லுவீங்க பாருங்க ஒரு பன்ச்
"அழைப்புக்கட்டணங்களை பஞ்சாய் பறக்கச்செய்யும் FRING" அப்டீன்னு.

முக்கியகுறிப்பு : iPhone, iPod Touch, Windows Mobile, Nokia 5800 Music Xpress போன்ற மாடல்களுக்கு உசிதமானது.

Sunday, 2 August 2009

நட்புடன் டயானா




"உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" -திருவள்ளுவர்-

ஆகஸ்ட் மாதத்தின் முதல் பதிவாக வரவேற்பு தரும் இப்பதிவு இன்றைய நட்புதினம் பற்றியது. உங்களுக்கு தெரியாததல்ல.
சர்வதேச ரீதியில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறன்று இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு சிறப்பான விஷயத்துக்கும் ஒரு சிறப்பு நாளை ஒதுக்கி அவை சிலரால் கொண்டாடப்பட்டும், சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருவது சாதாரணமாக இடம்பெறுவது. எது எப்படியோ நல்ல விஷயங்களை நல்ல மனதோட ஏற்றுக்கொண்டால் எப்போதும் நன்மையே!

இந்த சர்வதேச நட்பு தினமானது முதன்முதலாக 1935 இல் அமெரிக்காவில் அனுஷ்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மெல்ல மெல்ல ஏனைய நாடுகளுக்கும் பரவியது. இலங்கையை பொறுத்தவரை நண்பர்களுக்கிடையில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு சரி. அதையும் மீறி அவர்களுக்காக ஒரு பாடல் பரிசு வானொலிப் பண்பலைகள் மூலமாகவும் கேட்கும் வாய்ப்பும் உள்ளது.


இந்த நட்பு தினம், பழைய நண்பர்களை மறக்காமல் இருக்கவும், புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளவும், ஏன் பிரிந்த நண்பர்களை ஒன்று சேர்க்கும் ஒரு நாளாகவும் கூட இருந்து வருகிறது. நல்ல விஷயம் தான் இப்படி ஒரு நாள் இருப்பதும் கூட... சண்டைகள் வருவது சகஜம் தான். ஆனால் அந்த சண்டைகள் நிரந்த பிரிவிற்கு வழிவகுத்த சந்தர்ப்பங்களிலிருந்து நண்பர்களை மீட்டெடுத்த சந்தர்ப்பங்கள் இந்த நட்பு தினத்தில் நிகழ்ந்துள்ளன.

நானும் இப்போது என்னுடைய அன்பு நண்பர்கள் பலரை பிரிந்திருந்தாலும், முகப்புத்தகம் அவர்களை என்னருகில் கொண்டுவந்து நிறுத்தியது போன்ற அனுபவத்தை தருகிறது. இந்த நாள் நிச்சயமாக முகப்புத்தகத்தாலும் அனுஷ்டிக்கப்பட வேண்டிய ஒரு நாள். காரணம் எந்த தூரத்தில் இருந்தாலும்.. நண்பர்களை எப்போதும் இணைப்பதால்! (நின் சேவைக்கு நன்றி முகப்புத்தகம்)

இந்த நாளில் என்னுடைய பள்ளிபருவ உயிர்த்தோழிகளை நினைத்துப்பார்க்கிறேன்... சாதாரணமாக அந்த வயதில் தோன்றும் நட்பு எந்த எதிர்ப்பார்ப்புமின்றி தோன்றுவது.

என்னுடைய Five Star / Back Street Girls / நாம் ஐவர் etc... இப்படி ஏராளமான பெயர்கள் எங்களுக்கு - நான், சங்கீதா, ரூபி, நித்தியா, சுசீலா பாடசாலையில் நாங்கள் செய்யாத அட்டகாசமில்லை. படிப்பிலும் கெட்டி.. குழப்படியிலும் சுட்டி... புதுசு புதுசா விஷயங்கள் செய்ய, விளையாட ... இப்படி சொல்லிக்கொண்டே.. போகலாம் ... அது ஒரு நிலாக்காலம் ..... எல்லோருக்கும் வந்து போவது போல!

அந்த ஐவரில் இப்போது என்னுடன் இணை பிரியாமல் இருப்பவள் சங்கீதா மட்டுமே... ரூபி - முகப்புத்தகம் மூலமாக அப்ப அப்ப வந்து போவாள் (ஆடிகொருமுறை அமாவாசைக்கொருமுறை) மற்ற இருவரில் ஒருத்தி (சுசீலா) திருமணாகி இந்தியாவில். ஆனால் தொடர்பு எதுவும் இல்லை. மற்றவள்(நித்தியா) ஆசிரியையாக நுவரெலியாவில். ஆனால் தொடர்பில்லை.

எல்லோரும் எங்கிருந்தாலும் நல்லா இருக்கவேண்டும் என்பது என் தினசரி பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கிறது.

மலரும் நினைவுகளோடு....... நான்...

போங்க... நீங்களும்.. போய் மீட்டுங்க உங்கள் நினைவுகளை!