(இந்தப் பதிவு - கண்டிப்பாக பார்த்தவர்களுக்கு மட்டும்)
1) இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படத்திலும் காட்டப்படாத அளவுக்கு காட்டின் அழகு கண்களை நிறைக்கிறது. அழகானவற்றை பிரமிக்க வைக்கும் அளவுக்கு தன் ஒளிப்பதிவின் மூலம் காட்டுவது சந்தோஷ் சிவனுக்கு கை வந்த கலை. அதை இங்கும் நிரூபித்திருக்கிறார். மலை, மழை, மரங்கள், நீர், ஏன் ஐஸ்வர்யா ராய் கூட அழகின் செழுமையில் ஒருபடி மேல்தான் இந்தப் படத்தில்.
திரையரங்கின் A/C குளிரையும் தாண்டி ஒளிப்பதிவு கண்களைக் குளுமைப்படுத்தியது எனலாம்.
(மணிகண்டனுக்கும் இதில் பங்குண்டு)
ஸ்ரீகர் பிரசாதின் எடிட்டிங்க்கும் கிரெடிட் கொடுக்கலாம். பெயரோடத்தின்போது கிராபிக்ஸ் வியக்கவைக்கிறது
2 ) சொல்லிக்கொள்ளும் படியாக வீர தீர சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும் நிறைவுக்கட்டத்தில் தொங்குபாலச் சண்டை... ஆஹா.... கமெராவின் கோணத்தில் மெய் சிலிர்க்கவைத்தது.
3) எனக்கு ஐசுவை அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும் இந்தப்படத்தைப் பொறுத்தவரை ஐசுவின் கதாபாத்திரம் மட்டுமே மனதை நிறைக்கிறது...திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் கூட.
4) இசைப்புயலின் BGM மிரட்டுகிறது காட்சிகளுக்குத் தக்கவாறு... என்றாலும் இந்தப்படத்தை பொறுத்தவரை காட்சிகளுக்கிடையில் பாடல்களுக்கான செருகல்கள் அர்த்தமற்று இருக்கின்றன.
5) ராவண் கதாபாத்திரத்தை இன்னும் பலமானதாகக் காட்டியிருக்கலாம்
(இது எனது உள் மனதின் ஏக்கம்... ரொம்ப எதிர்பார்தேன்பா)
6) நவீன ராமாயணம் + அதன் திருப்பங்கள் - இயக்குநர் சிகரம்
மணிரத்தினத்துக்கு மட்டுமே உரிய சிறப்பு
7) மணிரத்தினத்தின் திரைப்படங்களுக்குரிய இன்னுமொரு சிறப்பு - வசனங்கள். ஆனால் இந்தப்படத்தைப் பொறுத்தவரை அவ்வளவு உயிர்ப்பான வசனங்கள் இல்லை. சாதாரணமாக பேசப்பட்ட வசனங்கள்
மனதை எள்ளளவேனும் ஏதும் செய்யவுமில்லை.(மணி அங்கிள் அதை கொஞ்சம் கவனித்திருக்கலாம்)
8) கிளைமாக்ஸ் காட்சிக்கு இன்னும் கொஞ்சம் திருப்புமுனை கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்(த்ரில் அதிகரித்திருக்கும்).. ஏனென்றால் எதிர்பார்த்தது தான் கிளைமாக்ஸ் ஆனது. எனவே எனக்கு த்ரில் இல்லாமல் போனது :((
(உங்களுக்கு எப்படியோ தெரியாது)
9) விக்ரமும், ப்ரியாமணியும் தாங்களே ஹிந்தி dub: குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
10) சில பிரம்மிப்பூட்டும் இடங்களை இந்தப்படத்துக்காகவே தேடித் தேடி ஒளிப்பதிவு செய்திருக்காங்க
விஷ்ணு பகவானின் இரண்டாகப் பிளந்திருந்த சயன சிலை Locationஐ எப்படித் தேடிப்பிடித்தார்களோ தெரியல.
(அந்த இடத்துக்கு நேரே சென்று பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை .. படம் பார்த்தபோது)
11) பிரதான நடிகர்கள் இந்தப்படத்துக்காக எடுத்திருக்கும் ரிஸ்க்குகள் படம் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கச்செய்கிறது.
12) ஹனுமான் பாத்திரத்தை பிரதிபலிக்கும் கோவிந்தாவின் பாத்திரத்தை(தமிழில் கார்த்திக்) மதுப்புட்டியோடு மணி அங்கிள் காட்டியிருப்பது கொஞ்சம் நெருடல்
குறைகளும் நிறைகளும் இருந்தாலும்
நம்பிப் பார்க்கலாம் இந்த நவீன ராமாயணத்தை..