Friday, 28 January 2011

குடிப்போமா... தேத்தண்ணி ?

எப்படி போகுது வாழ்க்கை? உங்களைப்பார்த்து தான் கேட்கிறேன்...

ஆ... என்ன ... என்னுடைய வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தீங்களா ?

பரவாயில்லையே ... உங்களைபோன்ற பதிவுலகவாசிகள் என்னை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க.... உண்மைய சொல்லவேண்டுமென்றால்
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு தொடர் ஒய்வு.. வீட்டில் இருந்து கொண்டே அலுவலக வேலைகளையும் பார்த்துக்கொண்டு
பதிவுலகையும் ஆசையுடன் எட்டிப்பார்க்க முடிகிறது....

கண்களும் மனதும் எட்டிப்பார்த்தாலும்
விரல்கள் ஒரு பதிவை இட்டுச்செல்லவே ஆசைப்படுகிறது.... அவற்றின்
ஆசையை நான் ஏன் கெடுப்பானேன்....?

எந்த ஒரு விஷயத்தை நாங்கள் வாழ்க்கையில் சந்தித்தாலும் அதில் முதல் முதல் நாங்கள் எதிர்கொள்ளும் அனுபவத்தை யாராலும் மறக்க முடியாது..
பள்ளியின் முதல் நாள், முதல் காதல், முதல் முத்தம், ... இந்த வரிசையில் முதல்
வேலை கூட......


சக்தி பண்பலைக்குள் வரும்முன்னர் ஒரு தேயிலை நிறுவனம்(DILMAH -டில்மா) எனக்கு பல வேலைகளை கற்றுத்தந்தது...வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்காக....
அதுவும் உயர்தரத்தை முடித்துக்கொண்டு, பள்ளிவாழ்கையை நிறைவு செய்து கொண்டு, உலகை எதிர்கொள்ளும் புதிய உத்திகளை கற்றுக்கொள்ள எனக்கு உதவிய நிறுவனம் அது.. காரணம் அதனுடைய கட்டுக்கோப்பான ஒருங்கியம்.
ஒரு சாதாரண அடித்தள வேலையைக்கூட எவ்வாறு பூரணமாக செய்ய வேண்டும்... அதையே இன்னொரு மாதிரி சொல்வதென்றால் ''பக்காவா''
செய்வதற்கான ஆற்றலை கற்றுத்தந்த நிறுவனம்.

நான் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்றபடியால் ஆய்வுகூடத்தோடு சம்பந்தமான வேலையில் சேர வேண்டுமென்ற ஆவலில் தந்தையின் வழிநடத்தலுடன் இந்த
டில்மா(DILMAH) நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டுப்
பிரிவில் சேர்ந்தேன்.

இதில் எனக்கு முதல் வழங்கப்பட்ட பணி பொதிசெய்வதற்காக நிறுவனத்துக்கு
கொண்டுவரப்படும் தேயிலை மாதிரிகளை சுவைத்து தரப்படுத்துவது. 'Tea Taster' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்..
மிகவும் சுவாரசியமான வேலை ஆனால் ஒரு நாளைக்கு 100 மாதிரிகளை சுவைக்கும் போது வெறுத்தே போய்விடும்.

ஆனால் எனக்குள் ஒரு சந்தோசம் .. இந்த Tea Tasting என்பது எல்லாராலும் செய்ய முடியாத காரியம்.. காரணம் ஒரு தேநீர் மாதிரியை தொண்டையின் ஆரம்பப்பகுதிவரை இழுத்து நாவினால் அதன் தன்மையையும் தரத்தையும் உணர்ந்து குறிப்பில் எழுதி... வழங்கப்பட்ட மாதிரி முதல் கட்டத்தில் Auction இல் உடன்பட்டு பெறப்பட்ட தேயிலையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தேநீர் மாதிரியை சுவைக்கும் போது அது கொண்டிருக்கும் சுவைக்கேற்ப தரப்படுத்தலாம். COLOURY , PLAIN , FAIR , THIN... இப்படி சுவையின் தன்மையை குறித்துக் கொடுத்து உறுதிப்படுத்த வேண்டும். இதை எல்லாராலும் உணர முடியாது. இதற்கென பிரத்தியேகமான பயிற்சியும் அவசியம். ஆனால் எனக்கு தேவைப்பட்டது ஒரே ஒருநாள் தான். எனக்கே கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது. இது கடவுளின் கொடுப்பினை என்று எண்ணிக்கொண்டேன். வேலையைத் தொடர்ந்தேன்.
நாளுக்கு நாள் தேயிலை வகைகளின் தன்மை, அவற்றின் உற்பத்தி, பரிசோதனைகள் என்று எக்கசெக்கமான அம்சங்களை தேடித்தேடி படித்துக்கொண்டேன். அவை மறக்க முடியாத நாட்கள்....
அனுபவங்கள்.

தேயிலை உடற்சுகாதாரத்தில் பங்களிப்பாற்றுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். இதயத்துக்கும் நன்மை பயக்கின்றது.

குறிப்பாக
Chrysanthemum Tea - இரவு பகல் பாராமல் மூளைக்கு அதிக வேலை கொடுப்போருக்கு ஏற்றது

Wu Loong Tea/Oolong Tea - உடல் உழைப்பில் அதிகம் ஈடுபடுவோருக்கு, அசைவ உணவு உண்போருக்கு ஏற்றது

Green Tea - அதிக தூரம் பயணிப்போர் , மாசு நிறைந்த இடங்களில் பணியாற்றுவோருக்கு ஏற்றது

Green Tea + Flower Tea - அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே வேலை பார்ப்போருக்கு ஏற்றது

Wu Loong Tea + Green Tea - அதிக ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளவர்களுக்கு உகந்தது.


எப்போதும் கணனியோடு காலம் தள்ளுவோருக்கு எந்த வகையான தேநீரும் உகந்தது.
எனவே எப்போது கணனிக்கு முன்னால் நீங்கள் அமர்ந்தாலும் ஒரு கோப்பை தேத்தண்ணியோடு உற்கார்ந்து வேலையைப்பாருங்க.

அப்போ நான் போய்ட்டு வாறன் ... என்ன எங்கேயா ?? தேத்தண்ணி கோப்பைய எடுத்துக் கொண்டு வரத்தான்...


'TAA TAA' sorry TEA TAA

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf